ஜோகூர் பாரு, மார்ச் 18 – “எனக்கு கிடைக்கும் மாதம் 27,000 ரிங்கிட் சம்பளத்தை வைத்து எனது அன்றாட வாழ்க்கையை வாழ முடியாது. அதனால் தான் பல தொழில்களில் முதலீடு செய்கின்றேன்” என ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று ‘தி ஸ்டார்’ பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் மாநிலத்தின் முடிமன்னர்கள் தான். ஆனால் மற்றவர்களைப் போல், வாழ்வதற்காக சம்பாதித்து தான் ஆக வேண்டும். எனக்கு கிடைக்கும் 27,000 ரிங்கிட் மாத சம்பளத்தை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதால் மற்ற மலேசியர்களைப் போல் நானும் உழைக்கின்றேன்” என்று ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.
ஜோகூர் அரச குடும்பம் தொழில்களில் ஈடுபடுவது ஒன்று புதிது இல்லையே. எங்களுடைய முப்பாட்டனார் காலத்தில் இருந்தே நடந்து வருவது தானே? என்றும் ஜோகூர் சுல்தான் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “என்னுடைய தொழில்களை நான் மறைமுகமாக செய்யவில்லை. எல்லாவற்றையும் வெளிப்படையாகவே தான் செய்து வருகின்றேன்.” என்றும் ஜோகூர் சுல்தான் குறிப்பிட்டுள்ளார்.
நேர்மையான முறையில் தொழில் செய்வது தான் அரச குடும்பத்திற்கு நல்லது என்றும், மறைமுகமாக செய்தால் அரச குடும்பத்தின் நற்பெயரை கெடுத்துவிடும் என்றும் ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
“நான் பட்டங்களை விற்று வருவாயை தேடிக்கொள்வதாக ஜோகூர் மக்கள் என்னை ஒருபோதும் எண்ண மாட்டார்கள் என உறுதியாகக் கூறுவேன்” என்றும் ஜோகூர் சுல்தான் கூறியுள்ளார்.