புதுடெல்லி, மார்ச் 23 – இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த திடீர் தீ விபத்து காரணமாக பெரும் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில் பவன் அருகே அதன் எட்டாவது நுழைவு வாயில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த நுழைவு வாயிலில் உள்ள குளிர்சாதன இணைப்புப் பகுதியில் திடீர் மின்கசிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு திடீரென தீ மூண்டு, சில நிமிடங்களில் அது வேகமாகப் பரவியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் காவல் படையினர், தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக 30 அதிகாரிகளுடன் கூடிய 11 தீயணைப்பு வாகனங்கள் நாடாளுமன்றப் பகுதிக்கு விரைந்தன. பின்னர் துரித கதியில் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
முன்னதாக தீ பரவியதால் அப்பகுதியில் கரும்புகை வானளவு உயர்ந்து காணப்பட்டது. இதனால் நாடாளுமன்ற கட்டடத்திற்குள்ளும் தீ பரவிவிட்டதாக பரபரப்பு நிலவியது.
தீயணைப்பு வீரர்களின் துரித செயல்பாடு காரணமாக பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக நாடாளுமன்ற அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.