பெங்கலான் செப்பா, மார்ச் 22 – இன்று நடைபெற்ற கிளந்தான் சட்டமன்றத் தொகுதி செம்பாக்காவுக்கான இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வேட்பாளர் அகமட் ஃபாத்தான் மாமுட் (படம்) 10,092 வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கின்றார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயேச்சை வேட்பாளர்கள் ஷரிப் மாமுட் 807 வாக்குகளும், ஃபாடில்லா ஹூசேன் 89 வாக்குகளும், அஸ்லா மாமாட் 27 வாக்குகளும், இசாட் புக்காரி 51 வாக்குகளும் பெற்று படுதோல்வி அடைந்திருக்கின்றனர். இதனால் இவர்கள் அனைவரும் தங்களின் வைப்புத் தொகையை இழந்து விடுவார்கள்.
முன்னாள் கிளந்தான் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவருமான நிக் அசிஸ் மறைவால் இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது.
இன்று நடந்த வாக்களிப்பில் சுமார் 55 சதவீத வாக்காளர்கள் அதாவது சுமார் 12,000 பேர் வாக்களித்தனர் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 21,890 ஆகும்.