கோலாலம்பூர், மார்ச் 27 – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறவிருக்கும் சிங்கையின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள நாளை மலேசிய மாமன்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாசாம் ஷா சிங்கப்பூர் வந்தடைவார்.
நாளை மாலை 5 மணியளவில் மாமன்னர் சிங்கப்பூர் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியா-சிங்கப்பூர் இரண்டு நாடுகளும் ஒரு குறுகிய காலத்திற்கு ஒரே நாடாக இருந்தன என்பதோடு, நீண்ட காலமாக அணுக்கமான நட்புறவையும் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லீ குவான் இயூவிற்கு வழங்கும் உயரிய மரியாதையாக மாமன்னரே அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவிருக்கின்றார்.
இந்த தகவலை சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் ஹூஸ்னி ஸாய் யாக்கோப் வெளியிட்டார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் 5.15 மணி வரை சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள கலாச்சார மையத்தில் (University Cultural Centre) லீ குவான் இயூவிற்கு இறுதி அஞ்சலி தெரிவிக்கும் நிகழ்வில் உலகத் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரையில் அறிவிக்கப்பட்டபடி இந்தோனிசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே, தென் கொரிய அதிபர் பார்க் குவென் ஹாய், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டனைப் பிரதிநிதித்து கலந்து கொள்வார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற சதுக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் லீ குவான் இயூவின் நல்லுடலுக்கு தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் மணிக் கணக்கில் வரிசையில் நின்று தங்களின் இறுதி மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை 11 மணி வரையில் சுமார் 230,000 பேர் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியிருப்பார்கள் என கணிக்கப்படுகின்றது. அதிபர் மாளிகைக்கும், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் அஞ்சலி அட்டைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
முன்னாள் இந்தோனிசிய அதிபர்கள் சுசிலோ பம்பாங் யுதோயோனோ மற்றும்