பாரிஸ், மார்ச் 28 – ஜெர்மன்விங்ஸ் விமானப் பேரிடரை ஏற்படக் காரணமான துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் (28) மன நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர் விமானியாவதற்கான தகுதிகளை இழந்து இருந்தாலும் அதனை மறைத்து விமான பயிற்சி மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லூபிட்ஸ் எந்த காரணத்திற்காக இப்படி ஒரு பேரிடரை ஏற்படுத்தினார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பிரஞ்சு விசாரணை அதிகாரிகள், சமீபத்தில் அவரின் குடியிருப்புப் பகுதிக்கு சென்று அவரின் அறையை சோதனை செய்துள்ளனர்.
அப்போது, கிழிந்த நிலையில் மருத்துவ அறிக்கை ஒன்று கிடைத்துள்ளது. அந்த அறிக்கை ஆய்வு செய்ததில், லூபிட்ஸ் விமானி ஆவதற்கான மருத்துவ தகுதிகளை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
(துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ்)
இதன் மூலம் அவர், தனது பணியை தக்க வைத்துக் கொள்ள, தான் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சைகளை விமான நிறுவனத்திடம் மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் பத்திரிக்கைகள் லூபிட்ஸ் மனநோயாளி என்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில், லூபிட்ஸ் இந்த செயல் அதிர்ச்சி அளிப்பதாக அவரின் சுற்றத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், “லூபிட்ஸ் தனது வேலையை மிகவும் விரும்பி செய்தார். தனது உடல் நலனில் அக்கறை கொண்ட அவர் தினமும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்வார். அவர் ஏன் இத்தகைய கொடுஞ் செயலை செய்தார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளனர்.