கோலாலம்பூர், மார்ச் 28 – இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டிடத்தில் சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2009ஆம் ஆண்டுக்கான மஇகா மத்திய செயலவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். வழக்கம்போல் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேலுவால் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட 5 பேர் நிலைமை, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் சங்கப் பதிவக உத்தரவுகள் குறித்த வழக்கு, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற வேண்டிய கிளைகள் மற்றும் தேசியத் தலைவருக்கான தேர்தல்கள் போன்ற விவகாரங்கள் குறித்து சில முக்கிய முடிவுகளை இந்த மத்திய செயலவைக் கூட்டம் எடுக்கும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
மஇகா விவகாரத்தை மத்திய செயலவையின் முன் அனுமதியின்றி நீதிமன்றம் கொண்டு சென்றதால் பழனிவேலுவும் அவரது குழுவினரும் மஇகா சட்டவிதிகள் 91இன்படி இயல்பாகவே கட்சியில் தங்களின் உறுப்பியத்தை இழந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என எழுந்திருக்கும் சர்ச்சை குறித்தும் இன்று நடைபெறும் மத்திய செயலவை முடிவெடுக்கக் கூடும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் குழுத் தலைவர் பதவியை விஜேந்திரன் ஏற்றுக் கொள்வாரா?
கட்சித் தேர்தல்களை நடத்த தேர்தல் குழு அமைக்கப்படுவது குறித்தும் இன்றைய கூட்டம் விவாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தல் குழுவிற்கு தலைவராகப் பொறுப்பேற்க கட்சியின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், தலைமைச் செயலாளருமான வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரனை நியமித்து கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் இன்னும் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வது குறித்து ஒப்புதல் கடிதம் வழங்கவில்லை.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் போக்கு குறித்து இறுதியான முடிவு எடுக்கப்பட்ட பின்னரே விஜேந்திரன் தேர்தல் குழுத் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்ற முடிவை எடுப்பார் என அவருக்கு நெருக்கமான மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 2இல் சங்கப் பதிவகம் மீதான வழக்கு
இதற்கிடையில், மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.
வழக்கு முடிவடையும்வரை சங்கப் பதிவகம் 6 பிப்ரவரி 2015 தேதியிட்ட கடிதத்தின் வழி பிறப்பித்துள்ள உத்தரவுகளை செயல்படுத்தப்படுவதிலிருந்து இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என பழனிவேல் தரப்பினர் செய்து கொண்டுள்ள விண்ணப்பம் ஏப்ரல் 2இல் விசாரணைக்கு வருகின்றது.
இடைக்காலத் தடை வழங்குவது குறித்தும், நீதிமன்றத்தின் முன் இருக்கும் சீராய்வு மனுவை தொடர்ந்து விசாரிப்பது குறித்தும் நீதிமன்றம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் தனது விசாரணைகளைத் தொடரும்.
நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையுத்தரவு பெறுவதில் பழனிவேல் தரப்பினர் வெற்றி பெற்றால் நீதிமன்றத்தின் இறுதி முடிவு தெரியும் வரையில் 2009 மற்றும் 2013 மத்திய செயலவைகளின் நடவடிக்கைகளும் கட்சித் தேர்தல்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.