சென்னை, ஏப்ரல் 3 – சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று, பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு ஜெயலலிதா வழக்கு குறித்தும், எதிர்கட்சிகள் குறித்தும் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பரபரப்புப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
“ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் வரலாம். அவர் விடுதலையாகவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தீர்ப்பு எப்படி வந்தாலும், தமிழகத்தில் பெரிய மாற்றங்கள் நிகழாது. காரணம், அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டால், அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய பலமான எதிர்க்கட்சிகள் எதுவும் தமிழகத்தில் இல்லை.”
“பிரதான எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க வும் ஆளும் கட்சிக்கு நிகராக 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் உட்பட பல ஊழல்களைச் செய்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.