புது டெல்லி, ஏப்ரல் 3 – ‘காசு பணம் துட்டு மணி மணி’ இந்த பாடல் வரிகளே இந்திய நட்சத்திரங்களின் தற்போதய தாரக மந்திரம். குறிப்பிட்ட ஒரு உச்ச திரை நட்சத்திரம் ஒரு படத்தில் நடித்து சம்பாதிப்பதை ஒன்றிரண்டு விளம்பரங்கள் மூலம் மிகக் குறைந்த நாட்களில் சம்பாதித்து விடலாம். அந்த அளவிற்கு இந்தியாவில் விளம்பரங்கள் வர்த்தக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
ஒரு பொருள் தயாரிப்பதற்கு ஆகும் செலவிற்கு நிகராக அதனை வர்த்தகப்படுத்துவதற்கும் செலவு செய்யப்படுகிறது. பொருள் சிறியதோ பெரியதோ அதனை விளம்பரப்படுத்தும் நடிகரோ விளையாட்டு வீரரோ மக்கள் மத்தியில் புகழ் பெற்றவராகவே உள்ளார். இத்தகைய மாற்றத்திற்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று பன்னாட்டு நிறுவனங்களுக்குள் இருக்கும் கடுமையான போட்டி மற்றொன்று தங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களை கண்ணை மூடிக் கொண்டு வாங்கும் இந்திய மக்களின் மனப்போக்கு.
இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நட்சத்திரங்கள் கோடிகளை குவித்து வருகின்றனர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படும் அமீர் கான், படங்களில் நடித்து பிரபலமானதை விட, சத்திய மேவ ஜெயதே எனும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடித்து மிகப் பிரபலமடைந்தார். சமூக ஆர்வலர் என்ற தோற்றம் அவருக்கு உருவானதால், அவர் விளம்பரப்படுத்தும் பொருட்களும் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கின்றன. விளம்பரத்தில் நடிக்க நாள் ஒன்றிற்கு 5 கோடி வரை வாங்கும் அமீர், அனைத்து விளம்பரங்களையும் ஒத்துக் கொள்ளாமல் சில வரைமுறைகளின் கீழ் விளம்பரங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரின் சமீபத்திய விளம்பரம் ஸ்னாப்டீல் ஆகும்.
இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பது பாலிவுட் பாட்சா என்று அழைக்கப்படும் ஷாருக்கான். நாள் ஒன்றிற்கு 3.5-4 கோடி வரை சம்பளம் பெறும் ஷாருக்கான், தலையில் தேய்க்கும் எண்ணெய் முதல் காலுக்கு அணியும் செருப்பு வரை பெரும்பாலான விளம்பரங்களில் நடித்து பணம் ஈட்டி வருகிறார். இவர்களுக்கு அடுத்த இடத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
விளையாட்டு வீரர்களை பொறுத்தவரை விளம்பரங்களில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியும், துணைத் தலைவர் கோஹ்லியும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு விளம்பரத்தில் மூன்று நாட்கள் நடிக்க தோனிக்கு 12 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு பணத்தை அள்ளிக்கொடுத்து இந்திய நட்சத்திரங்களை, பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இதற்கிடையே பன்னாட்டு நிறுவனங்கள் கொட்டிக் கொடுக்கும் பணத்திற்காக இந்திய நட்சத்திரங்கள் அந்நிறுவனங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதால், இந்திய நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது குறிப்படத்தக்கது.