Home நாடு மகாதீர் விமர்சனங்களுக்கு நஜிப் உணர்ச்சிப்பூர்வ பதில்!

மகாதீர் விமர்சனங்களுக்கு நஜிப் உணர்ச்சிப்பூர்வ பதில்!

493
0
SHARE
Ad
NAJIB6

கோலாலம்பூர், ஏப்ரல் 10 – தன் மீது முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நஜிப் நேற்றைய டிவி3 நேர்காணலில் காரசாரமாக பதிலளித்திருப்பார் என தேசிய முன்னணித் தலைவர்கள் உட்பட, நாடே எதிர்பார்த்துக் காத்திருக்க, நஜிப்பின் பதிலோ மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்துள்ளது.

மகாதீர் விமர்சனங்கள் குறித்து நஜிப் கூறியிருப்பதாவது:-

“அவர் உருவாக்க நினைத்த சில விசயங்களை என்னிடம் செய்யுமாறு கூறினார். நான் அதில் எனது கருத்துகளைத் தெரிவித்தேன். உதாரணமாக, BR1M உதவித்தொகையை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஜோகூர் – சிங்கப்பூர் காஸ்வே பாலத்திற்கு பதிலாக ‘வளைவு பாலம்’ ஒன்றை கட்டுமாறு என்னிடம் கூறினார்.”

#TamilSchoolmychoice

“இது இரண்டு தனிப்பட்ட நபர்களின் கலந்துரையாடல்களாக தான் நான் பார்க்கிறேன். கருத்துவேறுபாடுகள் இருப்பது ஆரோக்கியமான விசயம் தான். என்றாலும் கடைசியில், கட்சிக்கும், மக்களுக்கும் நான் தான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அவர் கூறியவற்றில் பெரும்பாலான விவகாரங்கள் அமைச்சரவைக்கு கொண்டு செல்லப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன” என்று நஜிப் கூறினார்.

‘மகாதீரை என் வீட்டிற்கு வர அனுமதித்தது இல்லை’

ஒரு மலேசியராக மகாதீருக்கு தன்னைப் பற்றி விமர்சிக்கவும், கேள்வி கேட்கவும் உரிமை உள்ளது என்று கூறிய நஜிப், மகாதீர் மீது தான் எப்போதும் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

“நான் அவருடன் (மகாதீர்) சில விசயங்களை கலந்தாலோசிக்கும் போது, நான் பிரதமர் என்றாலும் கூட, அவர் மீது நான் கொண்டிருக்கும் மரியாதையை காட்டிக் கொண்டு தான் இருக்கின்றேன். இதுவரை நான் தான் அவர் வீட்டிற்கு போயிருக்கின்றேனே தவிர அவரை என் வீட்டிற்கு வர அனுமதித்ததில்லை.”

“ஆனால், என்னதான் விவாதங்கள் செய்தாலும், பிரதமர் என்ற முறையில் தான் நான் முடிவுகளை எடுக்க முடியும்”

“நான் இப்போதும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மீது மிகுந்த மரியாதையுடன் இருக்கின்றேன். எனது தலைமைத்துவம் பற்றி விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. நான் அந்த விமர்சனங்களை கவனித்து கொண்டு தான் இருக்கின்றேன்.”

“ஆனால் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்கிறேன். நான் ஒரு பிரதமராகவும், அம்னோ தலைவராகவும் தான் முடிவுகளை எடுக்க முடியும். காரணம் அனைத்து மலேசியர்களின் சார்பில் நான் பொறுப்பு வகிக்கின்றேன்”

“அதே வேளையில், தனிநபர்களிடமிருந்து எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் , கடைசியில், கட்சிக்கும், மக்களுக்கும் நானே பொறுப்பானவன் ஆகின்றேன்”

இவ்வாறு பிரதமர் நஜிப் உணர்ச்சிப்பூர்வமாக தனது பதிலைத் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் பதிலால் அம்னோ மகளிர் பிரிவு திருப்தியடைந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தேசிய முன்னணியில் உள்ள மற்ற தலைவர்கள் திருப்தியடைந்தார்களா?  குறிப்பாக, மகாதீர் திருப்தியடைந்தாரா?என்பது இன்று தெரியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.