கோலாலம்பூர், ஏப்ரல் 10 – நேற்று இரவு டிவி3 -ல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வேளையில், எதிர்கட்சியை சேர்ந்தவரும், சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகருமான ஹன்னா இயோ தனது பேஸ்புக் பக்கத்தில் அதைப் பற்றிய பதிவு ஒன்றை செய்துள்ளார்.
அதில், ” இன்னொரு நேர்காணல் பயிற்சி. இன்னொரு காட்சி. இவரின் வார்த்தைகளை நம்ப முடியுமா? இவர் தான் ஒரு முறை ‘தேச நிந்தனை சட்டத்தை ஒழிப்போம்’ என்று கூறினார். ஆனால் இப்போது அது நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. தேச நிந்தனை சட்ட விவாதத்தின் போது பிரதமர் ஏன் நாடாளுமன்றத்தில் இல்லை? என்று ஏன் யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை” என்று ஹன்னா இயோ கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இரவு முழுவதும் நீடித்த தேச நிந்தனை சட்ட திருத்த விவாதம் முடிவுக்கு வந்து, இன்று அதிகாலை 2.30 மணியளவில் சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை சமர்ப்பித்து 11.57 மணியளவில் பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசிம் மற்றும் துணை பணி அமைச்சர் ரோஸ்னா ஷிர்லினும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.