Home நாடு அரசியல் பார்வை: 2009 மத்திய செயலவை 3வது தரப்பாக அனுமதி – மஇகா வழக்கில் முக்கியத்...

அரசியல் பார்வை: 2009 மத்திய செயலவை 3வது தரப்பாக அனுமதி – மஇகா வழக்கில் முக்கியத் திருப்பம்

499
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை)

M Saravananமஇகா – சங்கப் பதிவகம் இடையில் நடைபெற்று வரும் வழக்கில், மூன்றாவது தரப்பாக 2009 மத்திய செயலவையை அனுமதிக்கக் கோரும் விண்ணப்ப மனுவை நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பது, இந்த வழக்கின் மிக முக்கிய திருப்பமாகக் கருதப்பபடுகின்றது.

காரணம், வழக்கு தொடங்கி சில மாதங்களுக்குப் பின்னரே இந்த வழக்கில் தலையிட வேண்டுமென 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவை முடிவு செய்தது. அதன்படி, அந்த மத்திய செயலவையைப் பிரதிநிதித்து, கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ எம்.சரவணன் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.

#TamilSchoolmychoice

மூன்றாவது தரப்பாக தங்களை அனுமதிக்க 2009 மத்திய செயலவை செய்திருந்த விண்ணப்பம் காலங்கடந்து சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகக் கருதி நீதிமன்றம் அதனை நிராகரிக்கலாம் என்ற சட்ட ஆலோசனையும் ஒருபுறம் வழங்கப்பட்டிருந்தது.

MIC Building with Palanivelஅதே வேளையில், ஏற்கனவே, மூன்றாவது தரப்பாக முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரனை நீதிமன்றம் ஏற்கனவே அனுமதித்திருப்பதால், இன்னொரு விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற நிலையில் சரவணனின் மனு நிராகரிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவியது.

இத்தகைய சூழ்நிலையில் சரவணனின் மனு நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியம் நிறையவே இருந்தது. அவ்வாறு சரவணனின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தால் அது டாக்டர் சுப்ரமணியம் தலையிலான அணியினருக்கு பலத்த பின்னடைவாக இருந்திருக்கும். அவர்களின் அணியினருக்கு சாதகமற்ற அரசியல் அதிர்வலைகளையும் அத்தகைய நீதிமன்ற முடிவு ஏற்படுத்தியிருக்கும்.

சாதகங்கள் என்ன?

சரவணனின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால், இனி நடைபெறும் வழக்கில் 2009 மத்திய செயலவையினர் தங்களின் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு முன்வைக்க முடியும்.

G PALANIVEL / SEPETANG BERSAMA PRESIDEN MICதேசியத் தலைவர் பழனிவேலுவும் மற்ற இரண்டு உதவித் தலைவர்களும் வழக்கைத் தொடுத்திருப்பதால், ஏதோ மஇகா தலைமைத்துவமே நேரடியாக சங்கப் பதிவகத்தின் மீது வழக்கைத் தொடுக்கின்றது என்பது போன்ற ஒரு மாயைத் தோற்றம் நீதிமன்றத்தின் முன் இதுவரை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், 2013 மஇகா தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டுவிட்டதால், அந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை செயல்பட முடியாது என்ற நிலையில், மஇகா சட்டவிதிகளின்படி 2009 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைக்கு சங்கப் பதிவகம் மீண்டும் உயிர் கொடுத்து, புதிய தேர்தலை அந்த மத்திய செயற்குழுவே வழிநடத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த சங்கப் பதிவக முடிவை எதிர்த்துத்தான் பழனிவேல் தரப்பினர் நீதிமன்ற வழக்கைத் தொடுத்திருந்தனர்.

இனி தொடர்ந்து மே 12ஆம் தேதி நடைபெறப் போகும் வழக்கின் விசாரணை மேலும் திசை மாறலாம் – சில அதிரடி மாற்றங்கள் நிகழலாம் – என மஇகா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆனந்தன் மனு நிராகரிப்பு ஏன்?

சரவணன் மனுவோடு சமர்ப்பிக்கப்பட்ட கெடா எஸ்.ஆனந்தனின் மனுவை மட்டும் நீதிமன்றம் நிராகரித்திருக்கின்றது.

s.ananthan2013 கட்சித்தேர்தலில் போட்டியிட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்களின் சார்பில், அதே தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட ஆனந்தன் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

ஆனால், ஏற்கனவே, முன்னாள் இளைஞர் பகுதித் தலைவரும், 2013 தேர்தலில் உதவித் தலைவருக்குப் போட்டியிட்டவருமான செனட்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனும் இதே அடிப்படையிலான மனு ஒன்றைச் சமர்ப்பித்து அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது.

அதனால், இதே அடிப்படையில் மீண்டும் ஒரு மனுவை ஏற்றுக் கொள்வது தேவையில்லாத ஒன்று என்ற அடிப்படையில் நீதிமன்றம் ஆனந்தனின் மனுவை நிராகரித்திருப்பதாக இந்த வழக்கைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது இரண்டு தரப்புகள் மூன்றாம் தரப்பாக வழக்கின் உள்ளே அனுமதிக்கப்பட்டு, நுழைந்திருப்பதால், ஆனந்தன் மனு நிராகரிக்கப்பட்டிருக்கின்றது.

இருப்பினும், தனது தரப்பு வாதங்கள் எதையாவது முன்வைக்க வேண்டுமென்றால், ஆனந்தன் இனி, சரவணன் தரப்பு மூலமாகவோ, விக்னேஸ்வரன் தரப்பு மூலமாகவோ நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லலாம்.

மே 12ஆம் தேதி வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மேலும் சில திருப்பங்கள் நிகழலாம்.

-இரா.முத்தரசன்