Home நாடு அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி

அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி

715
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 2 – நேற்று நடைபெற்ற பொருள்சேவை வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசனைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற உத்தரவைப் பெறுவதில் காவல் துறையினர் இன்று தோல்வி கண்டனர்.

Ambigaஅம்பிகாவோடு ஜசெக தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோணி லோக், பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் ஹாட்டா ரம்லி, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் ஆகியோரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்ற மேலும் 29 இளைஞர்களைத் தடுத்து வைக்கும் உத்தரவைப் பெறுவதில் காவல் துறையினர் வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

இவர்களில் 23 பேர் மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவர். மேலும் அறுவர் குறைந்த வயதுடையவர்கள் என்ற காரணத்திற்காக ஒரு நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“ஆரஞ்சு நிறத்திலான புகைச் சுருளை வெளியிட்டதற்காக – அது ஒரு பெரிய குற்றம் என்பதுபோல – இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்” என  இவர்களின் வழக்கறிஞர் மைக்கல் யேசுதாஸ் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது விடுதலைக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அம்பிகா, 29 பேரின் தடுப்புக் காவல் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் அவர்களை பொதுமக்கள் மறந்து விடக் கூடாது என்றும் கூறினார். அவர்களை கைவிலங்கிட்டும், சங்கிலிகளால் பிணைத்தும் காவல் துறை நிலையத்திற்கு கொண்டு வந்தது, மனித உரிமைகளுக்கு முரணானது என்றும் அம்பிகா வலியுறுத்தினார்.

Hishamuddin Raisபொருள்சேவை வரிகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், மேற்குறிப்பிட்ட நால்வர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, போராட்டவாதி ஹிஷாமுடின் ராய்சும் (படம்) காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஹிஷாமுடின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்தில் சரண் அடைந்ததைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியின் மற்றொரு உதவித் தலைவரான தியான் சுவாவும்  காவல் துறை நிலையத்திற்கு வருமாறு பணிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தான் தற்போது பெர்மாத்தாங் பாவ் சென்றுள்ளதாக காவல் துறைக்குத் தெரிவித்துள்ளதாகவும், அதன்பிறகு அவர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தியான் சுவா தெரிவித்துள்ளார்.