கோலாலம்பூர், மே 22 – நாட்டில் உள்ள பள்ளிகளின் நிலைமை குறித்து கல்வி அமைச்சரும் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் அறிந்திருக்கவில்லை என்று கல்வித்துறை முன்னாள் துணை அமைச்சர் புவாட் சர்காசி குற்றம்சாட்டியுள்ளார்.
பள்ளிகளின் நிலை குறித்து நேரடியாக களம் இறங்கி விவரம் அறிவதில் மொய்தீன் மிகவும் சோம்பலாக செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
“இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் குற்றம் காண முடியாது. ஏனெனில் கல்வி அமைச்சரும் அவரது துணை அமைச்சர்களுமே இவ்விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை,” என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினருமான சர்காசி கூறினார்.
சபா மற்றும் சரவாக்கில் உள்ள பள்ளிகளின் நிலைமை மிக மோசமாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இரு தவணைகள் கல்வி அமைச்சராக இருக்கும் மொய்தீன், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
சபாவில் உள்ள கெனின்காவ் பள்ளி மிக மோசமான நிலையில் உள்ளதாக ஃபேஸ்புக் தகவலை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட சர்காசி, இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கவலைப்படவில்லை என்றார்.
“அந்த பள்ளிக்குச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. கல்வி அமைச்சரும் துணை அமைச்சர்களுமே இவ்விஷயத்தில் ஆர்வம் காட்டாதபோது அதிகாரிகள் எப்படி ஆர்வம் காட்டுவர்?
“மேலோட்டமாக பார்க்கும்போது எல்லாம் அழகாகத் தெரிகிறது. ஆனால் கீழ்நிலையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை,” என்றார் சர்காசி.