புதுடில்லி, ஜூன்10- மியான்மர் நாட்டுக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது கொடூரத் தாக்குதல்களை நடத்திவருகின்றனர் சில தீவிரவாதிகள்.
பொறுமை இழந்த இந்திய ராணுவத்தின் கமாண்டோ படையினர், மியான்மருக்குள் புகுந்து தீவிரவாதிகளை அதிரடியாக வேட்டையாடினர்.
மணிப்பூர் மாநில எல்லையை ஒட்டியுள்ள மியான்மர் நாட்டுப்பகுதியில் இரண்டு முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்த தீவிரவாதிகள் கடந்த சில வாரங்களில் 30-க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதையடுத்து, இத்தீவிரவாதிகளின் முகாமை அழிக்கத் திட்டமிட்ட இந்திய ராணுவம், நேற்று அதிகாலை 3 மணிக்குக் கமாண்டோ படை வீரர்களை மியான்மருக்குள் அனுப்பியது.
அவர்களுக்கு உதவியாக ஆளில்லா விமானங்களும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் செயல்பட்டன.
இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் கூறியதாவது:
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் தகவலை மியான்மருக்கான இந்தியத் தூதரகம் நேற்று காலை வழக்கமான அலுவலக நேரத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் முறைப்படி தெரிவித்தது.
இந்த அதிரடித் தாக்குதலை நடத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அண்டை நாடுகள் இடமளித்தால், இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்று மோடி கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.