ரியாத், ஜூன் 11 – சவுதி அரேபியா நாட்டில் மத இழிவு, கொலை, கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளை ஆகிய குற்றங்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
நேற்று சவுதிக்குள் போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் சிரியாவை சேர்ந்த முஹம்மது உசேன் அப்துல் கரிம் ஹல்வானி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவருக்கு சவுதியில் உள்ள ஜுபைல் நகரில் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மேலும், கொலை குற்ற வழக்கில் கைதான சவுதி நாட்டை சேர்ந்த உசேன் அல் கதானி மற்றும் ஜிப்ரான் அல் கதானி ஆகியோருக்கும் தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் சவுதியில் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மட்டும் 97 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.