வாஷிங்டன், ஜூன் 13 – இந்திய பணியாளர்களுக்கான எச்1பி விசா வழங்கலில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அந்நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசின் தொழிலாளர் துறை விசாரணையைத் தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகி உள்ள செய்திகளில், “அமெரிக்காவின் தலை சிறந்த கேளிக்கை நிறுவனமான வால்ட் டிஸ்னி, சுமார் 250 அமெரிக்க பணியாளர்களை நீக்கி விட்டு அவர்களின் இடங்களை இந்தியர்களைக் கொண்டு நிரப்பியது. அப்படி பணியில் அமர்த்தப்பட்ட இந்தியர்கள் அனைவருக்கும் வாட் டிஸ்னி எச்1பி விசாக்களை, இந்திய ‘அயலாக்க’ (Outsourcing) நிறுவனங்கள் மூலம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற நிறுவனமும் சுமார் 500 பணியாளர்களை நீக்கி விட்டு தற்காலிக பணி விசா பெற்றிருக்கும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது”
“இதன் மூலம் வர்த்தகம் மற்றும் அயலாக்க நிறுவனங்கள், எச்1பி தற்காலிக விசாவைப் பயன்படுத்தி அமெரிக்காவில் பல வேலைகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை பாராமுகமாக இருந்து வந்த அமெரிக்க தொழிற்துறை, தற்போது பூதாகரமாகி உள்ளதால், தனது விசாரணையைத் துவங்கி உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் விசாரிக்கப்படுவதற்கு காரணம், இந்த இரு நிறுவனங்கள் தான் அமெரிக்காவிற்கு தொழில்நுட்ப ஊழியர்களை தற்காலிகமாக பணியாற்ற அனுப்புகிறது.