சென்னை, ஜூலை 1- மெட்ரோ தொடர்வண்டியில் பயணம் செய்ய,தொடக்க நாளன்று கூட்டம் அலைமோதியது. பலர் குடும்பம் குடும்பமாகப் பயணம் செய்ய வந்தனர்.
ஆனால்,அடுத்த நாளே கூட்டம் குறையத் தொடங்கியது. இன்றோ பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது.
சென்னைவாசிகளின் கனவான மெட்ரோ தொடர்வண்டியில் பயணிக்கும் ஆர்வம்,தொடங்கிய இர்ண்டாவது நாளே மக்களிடையே குறைந்து போய்விட்டதா?
தொடக்க நாளன்று அலைமோதிய கூட்டம், சும்மா வேடிக்கையாகப் பயணம் செய்ய வந்த கூட்டமா? தினந்தோறும் அந்த மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் கூட மெட்ரோ தொடர்வண்டியில் தொடர்ந்து பயணம் செய்யாததன் காரணம் என்ன?
வித்தியாசமான பயண அனுபவம், ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்த மெட்ரோ தொடர்வண்டியை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம் தான் முதல்நாளன்று பயணிகளை அதிக அளவில் ஈர்த்துக் கொண்டு வந்ததா?
கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன?
முதல் காரணம்: அதிகக் கட்டணம். ‘4௦ ரூபாயா?’ என்ற கேள்வி, அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் எழுகின்றன.
இரண்டாவது காரணம்: போரூர் போன்ற வழித்தடங்களில் இருந்து வரும் பயணிகள் நீண்ட துாரம் சுற்றிக் கொண்டு, ஆலந்தூர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்திற்கு வந்து சேர வேண்டியிருக்கிறது.
மூன்றாவது காரணம்: பொருட்களை ஏதும் எடுத்துச் செல்ல முடிவதில்லை.
நான்காவது காரணம்: சாதாரண மக்கள் பயணச்சீட்டு பெறுவதில் உள்ள குழப்பம்.
ஐந்தாவது காரணம்: தொழில்நுட்பக் கோளாறு. தொடங்கிய இரண்டாவது நாளே தானியங்கிக் கதவு திறக்காமல் பயணிகள் பாதிப்புக்குள்ளானது.
மேற்கண்ட குறைகள் தீர்க்கப்பட்டால், ஒருவேளை பயணிகள் அதிகரித்து மெட்ரோ தொடர்வண்டிச் சேவை லாபகரமாக இயங்க வாய்ப்புண்டு.
.