ஜோர்ஜ்டவுன், ஜூலை 5 – பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குக்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கில் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஜஹாரா ஹமிட் வெற்றி பெற்றுள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில், ஜஹாராவை ‘இனவாதப் பாட்டி’ என்று லிம் குவான் எங் (படம்) குறிப்பிட்டதைத் தொடர்ந்து அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் ஜஹாராவுக்கு நஷ்ட ஈடாக 5 லட்சம் வெள்ளியும், வழக்குச் செலவாக 40 ஆயிரம் வெள்ளியும் குவான் எங் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜஹாரா குறித்து மேலும் அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்றும் லிம்முக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லிம் கூறிய கருத்துக்கள் உண்மைகளின் அடிப்படையில் அமையவில்லை என்றும், அவை அவதூறானவை என்றும் நீதித்துறை ஆணையர் டத்தோ நோர்டின் ஹாசான் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கூறியதாக இணையதளம் ஒன்றில் வெளியான கருத்துக்கள் அவதூறானவை அல்ல என லிம் குவான் எங் தரப்பு நீதிமன்றத்தில் தற்காப்பு வாதம் புரிந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டபோது லிம், ஜஹாரா இருவருமே நீதிமன்றத்தில் இல்லை.
இந்நிலையில் தீர்ப்பு குறித்துச் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, தமது வழக்கறிஞர்களின் அறிவுரைப்படி தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாக லிம் தெரிவித்தார்.
தீர்ப்பு குறித்து ஜஹாரா கூறுகையில், தமக்கு நீதி கிடைத்திருப்பதாகவும், தாம் ஒரு இனவாதியல்ல என்றும் கூறினார்.