Home நாடு மஇகா: நாளை இடைக்காலத் தடையுத்தரவு வழக்கு! என்ன நடக்கலாம்?

மஇகா: நாளை இடைக்காலத் தடையுத்தரவு வழக்கு! என்ன நடக்கலாம்?

718
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 5 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பிற்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை அமுலாக்குவதற்கு எதிராகப் பழனிவேல் தரப்பினர் சமர்ப்பித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு விண்ணப்பத்தை நாளை ஜூலை 6ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செவிமடுக்கவிருக்கின்றது.

MIC PALANI SUBRA COMBOஇதற்கிடையில், அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டையும் பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்த வழக்கு துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற முறையில் எதிர்வரும் ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

#TamilSchoolmychoice

இந்நிலையில் நாளை இடைக்காலத் தடையுத்தரவு வழக்கில் நீதிமன்றம் இரண்டு விதமான முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்பிருப்பதாக இந்த வழக்கை அணுக்கமாகக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவதாக, இடைக்காலத் தடையுத்தரவு வழங்க முடியாது எனத் தள்ளுபடி செய்வது.

KL High Courtகாரணம், இந்தப் பழனிவேல் தொடுத்துள்ள இந்த வழக்கின் முக்கிய நோக்கமே சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்தக் கூடாது என்பதுதான். ஆனால், பழனிவேல் தரப்பினரோ, 2009 மத்தியச் செயலவைக்கான கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவதோடு, புதிய தேர்தல்களை நடத்துவதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளனர்.

சங்கப் பதிவகத்தின் கண்டுள்ள உத்தரவுகளில் முக்கியமான இரண்டு அம்சங்களை ஏற்றுக் கொண்டு பழனிவேல் தரப்பினர் செயல்பட்டு வருவதால், இடைக்காலத் தடையுத்தரவு என்பது தேவையில்லை என்பதோடு, அதற்கான அவசியமும் தற்போது இல்லை.

இதன் காரணமாக, இடைக்காலத் தடையுத்தரவு வழங்க முடியாது என நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

இரண்டாவது முடிவு – ஜூலை 13 வரை இடைக்காலத் தடை

ஜூலை 13ஆம் தேதி நடைபெறப்போகும் மேல்முறையீட்டு வழக்கில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு கிடைத்துவிடும் என்பதால் – இடையில் 7 நாட்கள் மட்டுமே இருப்பதால் – அதுவரை, தீர்ப்பிற்கு எதிராக இடைக்காலத் தடை விதித்து நாளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம்.

zul_palanivel_c57783_11622_307_v06நீதிமன்றம் இந்த முடிவு செய்வதற்கான மற்றொரு காரணம், இரண்டு தரப்பும் அறிவித்திருக்கும் கிளைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள்!

இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ராவின் அணியினர் எதிர்வரும் ஜூலை 10,11,12 தேதிகளில் மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவித்திருக்கின்றனர்.

பழனிவேல் தரப்பினரோ, ஜூலை 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என அறிவித்துள்ளனர். முன்பு ஜூலை 17ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் எனப் பழனிவேல் தரப்பில் அறிவித்த அந்த அணியினரின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.சோதிநாதன் தற்போது அந்த வேட்புமனுத் தாக்கல் ஜூலை 9ஆம் தேதியே நடைபெறும் என அறிவித்திருக்கின்றார்.

நாளை இடைக்காலத் தடையுத்தரவுக்கான விசாரணை நடைபெறும்போது, இந்த வேட்புமனுத் தாக்கல் தேதிகள் குறித்த வாதப் பிரதிவாதங்கள் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

subra-health-dentists-1பழனிவேல் தரப்பினர், வேட்புமனுத் தாக்கல் தேதியை மாற்றி முன்னதாக நடத்துவதற்குக் காரணம் நாளை நடைபெறும் வழக்கில் அதனை ஒரு முக்கியக் காரணமாக முன் வைப்பதுதான் என வழக்கைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

இடைக்காலத் தடையுத்தரவு வழங்காவிட்டால் – இரண்டு தரப்புகளும் வேட்புமனுத் தாக்கல்களை நடத்துவதால், அதனால் கட்சியில் குழப்பமே மிஞ்சும் என்பதும், இரண்டு தரப்புகளுக்கும் கட்சியில் தங்களுக்குள்ள நிலைப்பாடு குறித்துப் பாதகம் ஏற்படும் என்பதும் நாளை பழனிவேல் தரப்பினர் முன்வைக்கப் போகும் முக்கியமான வாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜூலை 13 வரை – அதாவது மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரை – இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகச் சில வழக்கறிஞர்கள் கருதுகின்றனர்.

அவ்வாறு ஜூலை 13 வரை, இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டால், இயல்பாகவே இரண்டு தரப்பினரின் வேட்புமனுத் தாக்கல்களும் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும்.

ஜூலை 13ஆம் தேதி,  மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையில் நடந்துவரும் சட்டப் போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்.

பழனிவேலுவின் மஇகா உறுப்பியம்

நாளை நடைபெறும் வழக்கிலும், ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் மேல்முறையீட்டு வழக்கிலும் கிடைக்கின்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும், மஇகா அமைப்பு விதி 91இன்படி பழனிவேலுவும், மற்ற நால்வரும் தங்களின் உறுப்பியத்தை இழந்துள்ள முடிவை அவை பாதிக்காது.

காரணம், சட்டவிதி 91இன்படி பழனிவேலுவும் மற்ற நால்வரும் உறுப்பியத்தை இழந்துள்ளது மத்தியச் செயலவையின் இறுதி முடிவு என்பதோடு, அதனை உறுதிப்படுத்திச் சங்கப் பதிவகமும் உறுதிக் கடிதத்தை வெளியிட்டு விட்டது.

எனவே, மஇகா உறுப்பியத்தை இழந்துள்ள பழனிவேலுவும் மற்ற நால்வரும் தாங்கள் உறுப்பினர்கள்தான் என்பதை நிலைநாட்ட வேண்டுமென்றால், ஒன்று சங்கப் பதிவகத்திடம் இருந்து உறுதிக் கடிதம் பெற வேண்டும் –

இல்லாவிட்டால், நீதிமன்றம் சென்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறவேண்டும்!

-இரா.முத்தரசன்