Home நாடு பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: மொகிதின்

பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: மொகிதின்

559
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 5 – பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப்புக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தி உள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மத்திய வங்கி (பேங்க் நெகாரா), காவல்துறை மற்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் எனச் சம்பந்தப்பட்ட அனைவரும் இதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

muhyiddin-yassin1“இந்த விசாரணை முழுமையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என நம்புகிறேன். அதன் முடிவில் உண்மை வெளிவர வேண்டும் என்பதே நோக்கம்,” என்று நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்கில் 2.7 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டு இருப்பதாக வால் ஸ்டிரீட் ஜெர்னல் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

“1 எம்டிபி நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து இந்தப் பணம் வந்திருப்பதாகக் கூறும் இந்தத் தகவல் உண்மையிலேயே கவலை தருகிறது. இது மிக முக்கியமான, கவனிக்கத்தக்க குற்றச்சாட்டு. நாட்டின் பிரதமர், அரசுத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மீதான நம்பகத்தன்மையை இது சிதைத்துவிடும்,” என்று மொகிதின் கூறியுள்ளார்.

இது பொதுநலன் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், பிரதமர் மீதான அண்மையக் குற்றச்சாட்டுகள் அனைத்துலக ஊடகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் நஜிப் உரிய விளக்கம் அளிப்பதோ, அல்லது குற்றச்சாட்டை மறுப்பதோ நல்லது என்றார்.

“இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பாரேயானால், குற்றம்சாட்டிய தரப்பின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதே சரியாக இருக்கும். அரசாங்கம் மற்றும் பிரதமரின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை இந்நடவடிக்கை போக்கும். உண்மைகள் நிச்சயம் வெளிவரும் என்பதால் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும்,” என மொகிதின் மேலும் கூறியுள்ளார்.