கோலாலம்பூர், ஜூலை 9 – 1எம்டிபி விவகாரம் வெடித்திருப்பதால் பதவி விலகுமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் பிரதமர் நஜிப்பை நிர்பந்திக்கவில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் மத்திய அமைச்சரவை ஒருமித்த கருத்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
“நடப்பு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வால் ஸ்டிரீட் ஜெர்னல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வது குறித்துத் தாம் இன்னும் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் விவரித்தார்.
அவரது வழக்கறிஞர்கள் ஏற்கெனவே அப்பத்திரிகையிடம் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியுள்ளது அனைவருக்கும் தெரியும்.
“அட்டர்னி ஜெனரல், காவல்துறை, ஊழல் ஊழல் தடுப்பு ஆணையம் அடங்கிய நடவடிக்கைக் குழு இந்த விவகாரம் குறித்து இன்னும் விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழுவினர் விசாரணையின் முடிவை அறிவிக்கும் வரை, கருத்துத் தெரிவிப்பது சரியல்ல,” என்று கைரி தெரிவித்துள்ளார்.
ரிங்கிட் மதிப்புக் குறைந்து வருவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மேற்கொண்டு அது தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கவில்லை.