சென்னை, ஜுல்லை 10- நடிகர் சிம்பு நடித்த வாலு திரைப்படத்திற்குத் தடை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாலு திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்ஐசி ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, அப்படத்தின், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நான்கு மாநில வெளியீட்டு உரிமையை மேஜிக் ரேய்ஸ் என்ற நிறுவனத்திற்கு ரூ.10 கோடிக்கு 2013-ல் ஒப்பந்தம் செய்து விற்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதை மீறித் தற்போது வேறு நபர் மூலமாக அப்படத்தை வெளியிட முயல்வதாக மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
எனவே தன்னைத் தவிர வேறு நபர் மூலமாக வாலு படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில்,”சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படத்தை வெளிவர விடாமல் தடுக்க, திரையுலகில் ஒரு கூட்டம் பெரிய அளவில் சதி செய்கிறது” என்று டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
”எனக்குப் பெரிய சொத்துக்களே என் பிள்ளைகள்தான். சிம்பு, இலக்கியா, குறளரசன் ஆகியோரை என் பெரிய சொத்துக்களாகக் கருதுகிறேன். சிம்பு நடித்த ‘வாலு’ படத்தை நான் சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்கிறேன். இதற்கான அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.
ஜூலை 17ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ‘வாலு’ படம் வெளிவரும் என்று ஜூன் 19ந் தேதியில் இருந்து விளம்பரம் செய்து வருகிறேன். இத்தனை நாட்களுக்குப்பின், ‘வாலு’ படத்துக்கு எதிராக மேஜிக் ரேய்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை வருகிற 13-ந் தேதி தொடர இருக்கிறது. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குறிப்பிட்ட ஒரு ஆங்கில வார்த்தையைத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘வாலு’ படத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது போல் செய்தி வெளியாகி இருக்கிறது.
நான் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டேன். படத்துக்கு உலகம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் வேளையில், இத்தனை நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது ஏன்? நான், நீதிபதியின் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறேன். அதற்குக் கட்டுப்படத் தயாராக இருக்கிறேன்.
இதற்கிடையில், ‘வாலு’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது போன்ற தகவலைப் பரப்பியிருக்கிறார்கள்.
இந்தப் படம் வெளிவரக் கூடாது என்று திரையுலகில் உள்ள ஒரு கூட்டம், பெரிய அளவில் சதி செய்கிறது. அவர்கள் யார்? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன்.
இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்கும், என் மகன் மற்றும் குடும்பத்துக்கும் கடவுள் துணையிருக்கிறார். கடவுள் காப்பாற்றுவார். இந்த நேரத்தில், ‘வாலு’ படம் வெளிவருவதற்கு ஆதரவு கொடுத்த தியேட்டர் அதிபர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.