உஃபே, ஜூலை 10- ரஷ்யாவிற்குப் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்திய நேரப்படி காலை 9.45 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.
அப்போது காஷ்மீர் எல்லையில் தொடரும் பாகிஸ்தானின் தாக்குதல்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆகியவை குறித்து ஷெரிப்பிடம் மோடி பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மும்பை தொடர்த் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள ரஹ்மான் லக்வியை விடுதலை செய்ததற்கு, ஷெரிப்பிடம் மோடி தனது எதிர்ப்பைத் தெரியப்படுத்தியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி கூறியிருப்பதாவது: “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கூட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.தெற்காசியாவில் உள்ள இருநாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பதற்றத்தைக் குறைத்துக் கொள்ள எந்தஒரு நடவடிக்கையை எடுத்தாலும் நாங்கள் வரவேற்கிறோம்.
பதற்றம் குறைவதைப் பார்க்கவேண்டும், இருநாடுகள் இடையிலான பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்று விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.