சென்னை, ஜூலை 11-காணாமல் போன இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி, கடலுக்கு அடியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
இது 33 நாட்களாகத் தீவிரமாகத் தேடியதன் பயனாகும்.
“ஒலிம்பிக் கேன்யான்’ மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தபோது காணாமல் போன விமானத்தின் கருப்புப் பெட்டி (Flight Data Recorder) கடலின் தரைப்பகுதியில் 960 மீட்டர் ஆழத்தில் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, நீர்மூழ்கிக் கப்பலின் உதவியுடன் கருப்புப் பெட்டியும், விமானத்தின் மற்றொரு சிறிய பொருளும் மீட்கப்பட்டது.
இதன்மூலம் இந்தப் பகுதியில்தான் விமானம் விழுந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், விமானத்தில் பயணித்த மூன்று விமானிகளின் நிலை என்னவானது? காணாமல் போன விமானத்தின் முக்கிய பாகங்கள் எங்கே என்பது போன்ற கேள்விகளுக்கான விடை தெரியவில்லை.
அதனால், தேடும் பணி இன்னும் தொடர்ந்து நடைபெறுகிறது.
கருப்புப் பெட்டியில் உள்ள உரையாடல் தகவல்களை மீட்பதன் மூலம் விமானம், விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரிய வரலாம் எனக் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.
ஆனால்,30 நாட்களுக்கு மேலாகிவிட்டதால் கருப்புப்பெட்டி செயலிழந்து விட்டது. செயலிழந்த கருப்புப்பெட்டியில் இருந்து தகவல்களை மீட்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.