Home கலை உலகம் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர்: கண்ணீரில் விஜயகாந்த்!

மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர்: கண்ணீரில் விஜயகாந்த்!

733
0
SHARE
Ad

iprakim ravuththar - vijayhakanthசென்னை, ஜூலை 11- விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், திரையுலகத் தயாரிப்பாளரும் முன்னாள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பால்ய வயது நண்பர்களான விஜயகாந்தும் இப்ராஹிம் ராவுத்தரும் மதுரையிலிருந்து சினிமா வாய்ப்புத் தேடி ஒன்றாகவே சென்னைக்கு வந்து, இன்ப துன்பங்களில் இணைந்தே இருந்தவர்கள்.

தனது சினிமா நிறுவனத்திற்கு  ‘ராவுத்தர் பிலிம்ஸ்’ என்று பெயரிடும் அளவிற்கு அவர்மீது விஜயகாந்திற்குப் பற்று. ஆனால், விஜயகாந்தின் திருமணத்திற்குப் பின் அந்த நட்பு மெல்ல விலக ஆரம்பித்தது. பின்பு, இருவரும் பிரிந்தே விட்டார்கள். பல வருடங்களாக எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் போனது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை விஜயகாந்த் நேற்று மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார்.

அவர் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்ததும் விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார்.

அதுபற்றி அவர் கைப்படக் கடிதம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

“நண்பா… நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன்.

அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததைக் கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னைக் கண்டவுடன் நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடிப் பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண் முன்பே வந்து சென்றது.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா…!

அன்புடன் உன் நண்பன்

விஜயகாந்த்”

என்று மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.