கோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த 1999 மற்றும் 2004-க்கு இடையே நடைபெற்ற லஞ்ச ஊழலில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் கூறியிருப்பதை பிரதமர் துறை அலுவலகம் (பிஎம்ஓ) மறுத்துள்ளது.
எனினும், மலேசிய அதிகாரிகள், ஆஸ்திரேலிய விசாரணை அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக, ‘தி ஏஜ்’ மற்றும் ‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது குறித்து பிரதமர் துறை அலுவலகம் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மலேசியாவைச் சேர்ந்த குழு ஒன்றின் நிதி பரிவர்த்தனைகளைப் பற்றிய முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்குமாறு, காமென்வெல்த் (பொதுநலவாய) சட்டத்துறை இலாகா முறையாக அனுமதி கோரியது என அந்த இரண்டு ஆஸ்திரேலியப் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவிற்கு பாலிமர் பணத் தாள்களை அச்சிட்டுக் கொடுக்கும் இரண்டு ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி நிறுவனங்களின் ஒப்பந்தங்களைப் பாதுகாக்கும் நோக்கில், அரசியலில் தொடர்புடைய இடைத்தரகர்கள், மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த இடைத்தரகர்கள், அன்றைய காலகட்டத்தில் துணைப்பிரதமராக இருந்த நஜிப் துன் ரசாக் மற்றும் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி ஆகியோரின் அலுவலங்களில் இருந்த முக்கிய நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் புத்ரா ஜெயா ஒத்துழைப்பு தர மறுப்பது, மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கத் திட்டமிட்ட அந்த ரிசர்வ் வங்கி நிறுவனங்களின் முன்னாள் தலைமை அதிகாரிகளின் மீது முறைப்படி வழக்குத் தொடுப்பதற்குத் இடையூறாக உள்ளது என்றும் அப்பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிஎம்ஓ, இடைத்தரகர்களின் தவறான செயல்களுடன் நஜிப்பை இணைத்துக் கூறுவது ஒரு “ பழிபோடும் முயற்சி” என்று தெரிவித்துள்ளது.
அதே வேளையில், அந்த கட்டுரையில் எங்குமே பிரதமரை (நஜிப்பை) நேரடியாகக் குற்றம் சாட்டுவது போன்ற ஒரு வரி கூட இல்லை என்றும் பிஎம்ஓ குறிப்பிட்டுள்ளது.