புதுடில்லி, ஜூலை 15- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப் பட்டது. பின்னர், அவர்களின் கருணை மனு மீதான தாமதத்தைக் காரணம் காட்டிக் கடந்த ஆண்டு, அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
தண்டனை அனுபவித்த காலத்தை கருத்தில்கொண்டு அவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
தமிழக அரசின் இந்த முடிவையும்,தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து மத்திய அரசு வழக்குத் தொடுத்தது.
ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததால், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
இதனால் ஏழு பேரை விடுதலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏழு பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுக்கள், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
எனவே, இது மிகவும் முக்கியத்துவம் பெற்ற வழக்காகக் கருதப்படுகிறது. ஏழு பேருக்கும் விடுதலை கிடைக்குமா?தண்டனை தொடருமா? என்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.