புது டெல்லி, ஜூலை 15 – குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை அளிக்கும் இப்தார் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கடைபிடிக்கப்படுவதையொட்டி, இன்று ஜனாதிபதி, தலைநகர் டெல்லியில் இப்தார் விருந்து அளிக்க இருக்கிறார். இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு மாநில முதல்வர்கள் இன்று பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதால் இப்தார் விருந்தில் மோடி கலந்து கொள்ளமாட்டார் என பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டும், ஜனாதிபதி அளித்த இப்தார் விருந்தில் பல்வேறு காரணங்களுக்காக கலந்து கொள்ளவில்லை. இதனால், மோடி திட்டமிட்டு இரண்டாம் முறையாக இப்தார் விருந்தை தட்டிக் கழித்துள்ளார். இதன் மூலம் அவரின் மதம் சார்ந்த போக்கு தெளிவாகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. ஆனால், மோடி முதல்வர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதனை மாற்றுவது ஏற்புடையதல்ல என்று பா.ஜ கட்சி தெரிவித்துள்ளது.