கோலாலம்பூர், ஜூலை 15 – மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையிலான அதிகாரபூர்வ மஇகாவின் வேட்புமனுத் தாக்கல்கள் கடந்த ஜூலை 10, 11, 12ஆம் தேதிகளில் நடந்து முடிந்ததில் நாடு முழுமையிலும் ஓரிரு கிளைகளில் மட்டுமே போட்டிகள் ஏற்பட்டிருந்தன.
அவ்வாறு, கூட்டரசுப் பிரதேசத்தில், செபுத்தே தொகுதியில் உள்ள மஇகா பழைய கிள்ளான் சாலைக் கிளையில் நடப்பு கிளைத் தலைவர் சுந்தர் சுப்ரமணியத்திற்கு எதிராக ஜி.பி.யுவராஜ் என்பவர் தலைவருக்குப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய, அதனால், மஇகா வட்டாரத்தில் பரபரப்பான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன.
இருப்பினும் இன்று யுவராஜ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டதை அடுத்து, அந்தக் கிளைத் தேர்தலில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கி, சுந்தர் சுப்ரமணியம் கிளைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“இனி நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” – சுந்தர் சுப்ரமணியத்துடன் (வலது) கைகுலுக்கும் யுவராஜ் (நடுவில்)
இது குறித்து செல்லியல் தகவல் ஊடகம் தொடர்பு கொண்ட போது, யுவராஜ் தனது வேட்புமனுவை மீட்டுக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்திய சுந்தர், “யுவராஜின் தந்தை ஜி.பச்சையப்பரும், எனது தந்தையார் டான்ஸ்ரீ சுப்ராவும் அரசியலிலும், நட்பிலும் நெருக்கமான தொடர்பை பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தவர்கள். அந்த அடிப்படையில் நானும் யுவராஜூம் கலந்து பேசி, நல்லெண்ண அடிப்படையிலும், கிளையின் நலன் கருதியும் இணைந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளோம். இனி கிளையின் எதிர்காலப் பணிகளில் யுவராஜின் ஆலோசனைகளோடு நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்” என்று கூறினார்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பாக, சுந்தர், தான் விடுத்த அறிக்கையில், மஇகா தலைமைத்துவப் போராட்டத்தில் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
இருப்பினும், கடந்த ஜூலை 12ஆம் தேதி டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமையில் நடைபெற்ற மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் சுந்தர் தலைவராகப் பதவி வகிக்கும் பழைய கிள்ளான் சாலைக் கிளையும் பங்கு பெற்றது மஇகா வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதே வேளையில் சுந்தரை எதிர்த்து யுவராஜ் கிளைத் தலைவருக்குப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்தார். மற்ற பதவிகளுக்கும் போட்டி நிலவியது. இந்நிலையில்தான் இன்று யுவராஜ் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.
மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக சுமார் 25 ஆண்டுகள் பதவி வகித்த டான்ஸ்ரீ சுப்ராவின் புதல்வரான சுந்தர் கடந்த 2013ஆம் ஆண்டில் அப்போதைய தேசியத் தலைவரான பழனிவேலுவால் மத்திய செயலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
அதன்பின்னர் 2013இல் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தலில் மத்திய செயற்குழு உறுப்பினராக பழனிவேல் அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும் பின்னர் இந்தத் தேர்தல்கள் செல்லாது என சங்கப் பதிவகத்தால் அறிவிக்கப்பட்டன.
அண்மையில் மஇகாவில் ஏற்பட்ட தலைமைத்துவப் போராட்டத்தைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டுக்கான பழனிவேல் தரப்பு மத்திய செயலவையில் பழனிவேலுவால் சுந்தர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டார்.