நியூ யார்க், ஜூலை 16 – முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (91) கழுத்தெலும்பு உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக புஷ்ஷின் செய்தித்தொடர்பாளர் ஜிம் மெக்ராத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அதிபர் புஷ், அவரது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து கழுத்தெலும்பை உடைத்துக் கொண்டார்.”
“அவரை உடனடியாக மீட்டு பொர்லாண்ட் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார். தற்போது அவர் நலமாக இருக்கிறார். வெகுவிரைவில் வீடு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.
1989 -ம் ஆண்டு முதல் 1993 -ம் ஆண்டு வரை அமெரிக்காவின் அதிபராக ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் பதவி வகித்தார். இவருக்குப் பிறகு இவரது மகனான ஜார்ஜ் டபிள்யூ புஷ், கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2009 -ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தார். இந்நிலையில், ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ்ஷின் இரண்டாவது மகனான ஜெப் புஷ், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கிய வேட்பாளராக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.