Home உலகம் ஜோர்ஜ் புஷ் மறைவு: சில நினைவுகள் – சில சுவாரசியத் தகவல்கள்!

ஜோர்ஜ் புஷ் மறைவு: சில நினைவுகள் – சில சுவாரசியத் தகவல்கள்!

1540
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் ஹூஸ்டன் நகரில் நேற்று (நவம்பர் 30) காலமானார்.

மிகப் பெரிய வரலாற்றையும் அரசியல் பின்புலத்தையும் கொண்ட ஜோர்ஜ் புஷ் குறித்த சில நினைவுச் சம்பவங்களையும், சுவாரசியமான தகவல்களையும் இங்கே நினைவு கூர்கிறோம்:-

  • அமெரிக்க அதிபர்களிலேயே மிக அதிக வயது உயிர்வாழ்ந்த அதிபர் என்ற பெருமையைப் பெறுகிறார் 12 ஜூன் 1924-இல் பிறந்த புஷ்.
  • மிகப் பெரிய பாரம்பரியத்தையும், செல்வாக்கும் அரசியல் பின்னணியும் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் –  ஜோர்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் – என்ற முழுப் பெயரைக் கொண்டவர். இவரது தந்தை ஒரு செனட்டராவார்.
  • அமெரிக்க வரலாற்றில் தந்தையும் மகனுமாக அதிபர் பதவி வகித்தவர்கள் ஜோர்ஜ் புஷ் மற்றும் அவரது மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். 41-வது அதிபராக தந்தை புஷ் 1989-இல் பதவிக்கு வந்தார். 1993 வரை அதிபராகப் பதவி வகித்தார்.
  • தந்தை ஒரே ஒரு தவணைக்கு மட்டுமே அதிபராக இருந்தார். ஆனால் மகன் புஷ் 2001 ஆண்டில் 43-வது அதிபராகப் பதவிக்கு வந்து 2009 வரை இரண்டு தவணைகளுக்கு அதிபராக இருந்தார்.
    43-வது அதிபராகப் பதவி வகித்த மகன் புஷ்

    ஆனால் தந்தை-மகன் அதிபர்களாக இருந்த சாதனைக்குச் சொந்தக்காரர்கள் புஷ் குடும்பத்தினர் மட்டுமல்ல. அமெரிக்காவின் இரண்டாவது அதிபராக 1797 முதல் 1801 வரை இருந்தவர் ஜோன் அடாம்ஸ். அதன் பின்னர் 1825 முதல் 1829 வரை ஜோன் அடாம்சின் மகன் ஜோன் குயின்சி அடாம்ஸ் அமெரிக்க அதிபராக இருந்தார். அதன்பின்னரே அண்மையில் தந்தை-மகன் அதிபர்களாக வந்த சாதனை புஷ் குடும்பத்தினரால் நிகழ்ந்தது.

  • பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் தனது 18-வது வயதில் மிக இளவயது கொண்ட கடற்படை விமானியாக அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாவது உலக யுத்தத்தில் போர் விமானியாகப் பணியாற்றினார்.
  • ஜோர்ஜ் புஷ்ஷின் மற்றொரு மகனான ஜெப் புஷ் புளோரிடா மாநில ஆளுநராகப் பதவி வகித்தவர். 2016-இல் அதிபர் போட்டியில் குதித்தாலும், ஜெப் புஷ் தான் சார்ந்திருந்த குடியரசுக் கட்சியின் வேட்பாளராகக் கூடத் தேர்வு பெற முடியவில்லை.
  • இராணுவப் பணி முடிந்ததும் எண்ணெய் வணிகத்தில் இறங்கி மிகப் பெரிய கோடீஸ்வரராக உருவெடுத்தார் புஷ்.
  • அரசியலில் ஈடுபட்ட அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • மற்றொரு சுவாரசியத் தகவல் 1976-இல் சிஐஏ எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையின் தலைவராக புஷ் நியமிக்கப்பட்டார் என்பது.
  • 1980-இல் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட புஷ் அந்த முயற்சியில் தோல்வியடைந்தார். அந்தப் போட்டியில் ரோனால்ட் ரீகன் வெற்றி பெற, ரீகனின் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோர்ஜ் புஷ். 1980 முதல் 1988 வரை ரீகனின் துணையதிபராகப் பதவி வகித்து வெள்ளை மாளிகையின் அனுபவத்தைப் பெற்றார்.
  • 1988-இல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இருந்தாலும் 1993-இல் இரண்டாவது தவணைக்குப் போட்டியிட்டபோது, ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஓர் இளம் வயது அரசியல்வாதி புஷ்ஷைத் தோற்கடித்தார். அவர்தான் பில் கிளிண்டன். இரண்டு தவணைகளுக்கு வெற்றிகரமாக அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்குப் பிறகு 2009-இல் அதிபராக வந்தவர் ஜோர்ஜ் புஷ்ஷின் மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்.
  • வான்குடை வீரரான ஜோர்ஜ் புஷ் தனது பிறந்த நாளின் போது வான்குடை மூலம் ஆகாயத்திலிருந்து குதித்து சாதனை புரிந்தவர். வான்குடை மூலம் இன்னொருவரின் உதவியோடு குதித்த அதிக வயதுடைய நபர் என்ற சாதனையைப் புரிந்தவர் ஜோர்ஜ் புஷ்.
  • 73 ஆண்டுகளாக தனது மனைவி பார்பராவுடன் வாழ்க்கை நடத்திய புஷ் இந்த ஆண்டு ஏப்ரலில் தனது மனைவியை இழந்தார்.
  • தனது இறுதிக் காலத்தில் பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டார் புஷ்.
  • அதிபராக இருந்த காலகட்டத்தில் இரஷியாவுடனான மறைமுக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் புஷ் முக்கியப் பங்காற்றினார்.
  • 1990-இல் ஈராக் அண்டை நாடான குவைத் நாட்டின் மீது படையெடுத்தபோது, அனைத்துலக நாடுகளின் படையைத் திரட்டி, அமெரிக்கத் தலைமையில் ஈராக்கை குவைத்திலிருந்து விரட்டியடித்து, குவைத் மீண்டும் சுதந்திரமாக செயல்பட வைத்த சாதனையைப் புரிந்தவர் புஷ்.
-செல்லியல் தொகுப்பு
#TamilSchoolmychoice