புதுடெல்லி, ஜூலை 21- ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில், “ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உள்ளது” எனத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்த முடிவைத் தமிழக அரசு எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாகத் தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், இதனை எதிர்த்து அப்போதைய மத்தியக் காங்கிரஸ் கூட்டணி அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்க, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை, கடந்த 15–ஆம் தேதி தொடங்கியது. அப்போது அனைத்து மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக 20–ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி நேற்று தமிழக அரசின் எழுத்துப்பூர்வமான வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:–
“இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சூழலில் தான் கைதிகளின் விடுதலை பற்றிய முடிவு குறித்து ஆலோசனை செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதுவும் மாநில அமைச்சரவையில் முடிவெடுத்து, அதனை சட்டசபையிலும் நிறைவேற்றிய பிறகு இந்த முடிவு குறித்து மத்திய அரசிடம் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அன்றைய மத்திய அரசு, தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல், தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது சட்ட நடைமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தும் செயலாகும்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 நபர்களும் தடா சட்டத்தின்கீழ் வரும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட தண்டனைக் காலத்தையும் சிறையில் கழித்துள்ளனர்.
எனவே, இவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அரசியல்சாசனச் சட்டத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத் தான் உண்டு.
குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தபோது தமிழக அரசே இந்த வழக்கின் மீதான விசாரணையைத் தாமாகவே முன்வந்து சி.பி.ஐ. வசம் கொடுத்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் மத்திய அரசின் வரம்புக்குள் தான் இந்த விடுதலை விவகாரம் வரும் என்ற மத்திய அரசின் வாதம் முற்றிலும் தவறானது.
இந்த வழக்கின் மீதான விசாரணை இந்தியா முழுவதும் பரவலாக செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. பல மாநிலங்களிலும் புலன்விசாரணை தொடர வேண்டியிருந்தது. எனவே இந்த வழக்கின் வசதி கருதித்தான் சி.பி.ஐ. வசம் மாநில அரசு ஒப்படைத்ததே தவிர, இந்த வழக்கின் மீதான முழு அதிகாரத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றிக் கொடுக்கவில்லை. எனவே இது மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தான் வருகிறது.
குற்றத்தில் தொடர்புடையவர்கள், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை ஆகியவை தமிழ்நாட்டுடன் தொடர்புடையவை. எனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ரத்து செய்ய வேண்டும்”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.