கோலாலம்பூர், ஜூலை 21 – 1எம்டிபி மற்றும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோ குறித்து தாங்கள் வெளியிட்ட கட்டுரைகளைத் தற்காத்துக் கொள்ள ‘த எட்ஜ்’ பத்திரிக்கை நீதிமன்றத்தை நாடத் தயாராகி வருகின்றது.
இது குறித்து இன்று அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், “நாங்கள் இதற்கு முன்பு சொன்னதை தான் மீண்டும் சொல்கிறோம். ஜோ லோ ( லோ தாயிக் ஜோ) குறித்தும், 1எம்டிபி விவகாரம் குறித்தும் நாங்கள் வெளியிட்ட கட்டுரைகளில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளது.
தாங்கள் வெளியிட்ட கட்டுரைகளுக்குப் பின்புலமாக இருந்த ஆதாரங்களை அரசாங்க விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கவும் ‘த எட்ஜ்’ தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
1எம்டிபி குறித்த தவறான தகவல்களைக் கொண்டு கட்டுரை வெளியிட்டிருப்பதாக கடந்த ஜூன் 29-ம் தேதி, உள்துறை அமைச்சு ‘த எட்ஜ்’ பத்திரிக்கைக்கு கடிதம் அனுப்பியது.
அந்தத் தவறான செய்திக்கு ‘த எட்ஜ்’ பத்திரிக்கையின் உரிமையாளர் டத்தோ தோங் கூய் ஆங் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.