கோலாலம்பூர், ஜூலை 23 – 1எம்டிபி நிறுவனம் குறித்து கட்டுரைகளை வெளியிட்டது தொடர்பாக விசாரணை நடத்த நேரில் வருமாறு எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹோ கே டாட்டுக்கு (படம்) காவல்துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பி உள்ளது.
விசாரணைக்கு வருமாறு இந்தச் சம்மன் அனுப்பப்பட்டதாக ஐஜிபி செயலகத்தின் உதவி ஆணையர் டத்தின் அஸ்மாவதி அகமட் தெரிவித்தார்.
“அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் நிச்சயம் வரவேண்டும்,” என்றார் அஸ்மாவதி அகமட்.
நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதன் பேரில், குற்றவியல் சட்டம் 124 பிரிவின் கீழ் ஹோ விசாரிக்கப்படுகிறார்.
அண்மையில் 1எம்டிபி நிறுவனம் தொடர்பாக தங்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களும் வணிகக் குற்ற விசாரணை பிரிவு மேற்கொள்ளும் விசாரணைக்கு உதவும் பொருட்டு மத்திய வங்கியான பேங்க் நெகாராவிடம் அளிக்கப்பட்டிருப்பதாக ஹோ கூறியிருந்தார்.
மேலும், காவல்துறையிடம் தமது வாக்குமூலத்தை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவர், 1எம்டிபி மற்றும் பெட்ரோ சவுதி நிறுவனத்துக்கு இடையேயான கூட்டு ஒப்பந்தம் (joint-venture) தொடர்பிலான ஆவணங்களை இந்தாண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட நபர் தங்களிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த நபர் தாய்லாந்து காவல்துறையால் கைது செய்யப்பட்ட சேவியர் ஜஸ்டோவா என்பதை ஹோ கே டாட் உறுதி செய்யவில்லை.