Home படிக்க வேண்டும் 3 ஆகாயத்தில் இருந்தபடியே ரசிக்க,ருசிக்க மலேசியாவிற்கு வருகிறது தொங்கும் உணவகம்!

ஆகாயத்தில் இருந்தபடியே ரசிக்க,ருசிக்க மலேசியாவிற்கு வருகிறது தொங்கும் உணவகம்!

709
0
SHARE
Ad

dinnerintheskyகோலாலம்பூர், ஜூலை 24 – கற்பனை செய்து பாருங்கள், 50 முதல் 100 அடி உயரத்தில், எந்தவொரு பிடிமானமும் இல்லாமல், நடுவில் மட்டும் ஒரு ஒற்றைக் கம்பி வடத்தில், ஒரு பாலம் தொங்கிக் கொண்டு இருக்கிறது. பாதுகாப்புக்கு கண்டிப்பான உத்தரவாதம் உண்டு. சரி அந்த பாலத்தில் என்ன தான் வேலை? என்று கேட்கத் தோன்றும். அது வெறும் பாலம் அல்ல, சிறிய அளவிலான உணவகம். ‘தாலாட்டுதே வானம்’ என்று பாடிக் கொண்டே குடும்பத்துடன் அமர்ந்து உணவு உண்ணலாம்.

அந்தரத்தில் பயத்துடன் எப்படி உணவு உட்கொள்வது? என்று கேள்வி கேட்பவர்களுக்கான உணவகம் இது அல்ல. புதுமை விரும்பிகளுக்கான உணவகம் இது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பெரும் வரவேற்பினை பெற்ற ‘டின்னர் இன் த ஸ்கை’ (Dinner in the Sky) உணவகம், வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி, கோலாலம்பூரில் கேஎல் டவரின் அருகில் தொ(ட)ங்க இருக்கிறது.

5 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட இந்த உணவகம், கிரென் மூலம் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருக்கும். சுற்றிவர கதவுகளோ, ஜன்னல்களோ, மேற்கூரையோ இல்லாமல், காற்றோட்டமாக, இந்த உலகத்தில் இருந்து நம்மை தனித்துக் காட்டுவது தான் இந்த உணவகத்தின் சிறப்பு. 21 பேர் அமரக்கூடிய இருக்கைகள் கொண்ட இந்த உணவகத்தில், ஒரே ஒரு தேர்ந்த சமையர் கலைஞர் நமக்கு தேவையான உணவினை சமைத்துக் கொடுப்பார். ஒரு பணியாளர் நமக்கான உணவுகளை பரிமாறுவார்.

#TamilSchoolmychoice

இரவு நேரத்தில், பூமியில் இருந்து பார்த்தால் வானத்தில் நட்சத்திரங்கள் அற்புதமாக காட்சி அளிக்கும். வானில் இருந்து பார்த்தால், பூமியில் இருக்கும் விளக்குகள் அனைத்தும் நட்சத்திரங்களாக ஜொலிக்கும். இரண்டு அனுபவங்களையும் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் உணர வேண்டும் என்பதே இந்த உணவகத்தின் அடிப்படைத் திட்டம்.

இத்தகைய அதீத கற்பனையை சாத்தியமாக்கி உள்ள பெல்ஜியத்தைச் சேர்ந்த டின்னர் இன் த ஸ்கை நிறுவனம், உலகம் முழுவதும் 40 முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில், 5000 மேற்பட்ட கிளைகளை பரப்பி, வாடிக்கையாளர் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி என்ற ஒற்றைக் கட்டுப்பாடுடன், வாடிக்கையாளரை வரவேற்கும் இந்த உணவகத்தில் உணவு உண்பதற்கு ஆகும் செலவு, நபர் ஒன்றிற்கு ‘வெறும்’ 599 ரிங்கிட் மட்டும் தான்.