புது டெல்லி, ஜூலை 26 – உலக அளவில் ஆப்பிளின் தயாரிப்புகளுக்கு பெரிய அளவிலான வர்த்தகம் இருந்தாலும், ஆசியாவின் முக்கிய சந்தையான இந்தியாவில் வரவேற்பு குறைவுதான். அதற்கு மிக முக்கியக் காரணம், ஆப்பிள், இந்திய சந்தைகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாமல் இருந்தது தான். சீனாவிலும் பிற நாடுகளிலும் காட்டும் ஆர்வத்தை, ஆப்பிள் இந்தியால் காட்டாமலே இருந்து வந்தது. இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட சாம்சுங் நிறுவனம், இந்திய சந்தைகளில் மிகப் பெரிய வர்த்தகத்தை ஈட்டியது.
இந்நிலையில், இந்திய சந்தைகளை குறி வைத்து ஆப்பிள் களம் இருங்க இருக்கிறது. இதில் ஆப்பிளுக்கு பலமான சவால்கள் காத்திருந்தாலும், அவை அனைத்தையும் கடந்து விட வேண்டும் என ஆப்பிள் முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்டமாக இந்தியாவில், ஆப்பிள் பெரிய அளவிலான விளம்பரத்தை மேற்கொள்ள இருக்கிறது. சாம்சுங் இந்தியாவில் செய்துவரும் விளம்பரங்களை விட ஆப்பிள், அதிக விளம்பரங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், உள்ளூர் விற்பனை நிலையங்களிலும் அதிக கவனம் செலுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்சமயம், இந்திய திறன்பேசிகளின் சந்தைகளில், 2 சதவீத பங்குகளையே (டைம்ஸ் ஆப் இந்தியா) ஆப்பிள் பெற்றுள்ளது. வரும் காலத்தில், 93 சதவீத வளர்ச்சியை பெரும் முனைப்பில் ஆப்பிள் களமிறங்கி உள்ளது.
ஆப்பிளின் இந்த நிலைப்பாடு தொடர்பாக தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி கூறுகையில், “ஆப்பிள், இந்தியாவில் தனது வர்த்தகத்தை பெருக்க முழுமுனைப்புடன் களமிறங்கி உள்ளது. விநியோகஸ்தர்களை அதிகரித்து, விற்பனையை பெருக்குவதே ஆப்பிளின் முக்கிய நோக்கமாக உள்ளது. பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்களிலும், சாம்சுங் நிறுவனத்திற்கு கடும் போட்டி காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை விண்டோஸ் கணினிகளின் விற்பனையை சமன் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த 4 காலாண்டுகளில் மட்டும், ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை 222 மில்லியனைத் தாண்டி உள்ளதாகக் கூறப்படுகிறது.