புத்ராஜெயா, ஜூலை 26 – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ‘டத்தோ’ ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1எம்டிபியுடன் தொடர்புடைய வேறொரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான, 54 வயதான அந்த ‘டத்தோ’வை 5 நாட்கள் தங்களின் காவலில் வைத்து விசாரணை நடத்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காவலுக்கான அவகாசம் முடிவடைய ஒரு நாள் இருந்தபோதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இருவரது பிணை உத்தரவாதத்தின் பேரில், ஒரு லட்சம் ரிங்கிட் பிணைத் தொகையில் அவரை பிணையில் விடுவித்தது புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம்.
1எம்டிபி விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று முத்தியாரா டாமான்சாராவில் உள்ள தங்கு விடுதியில் வைத்து அவரை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர்.
இதையடுத்து ஆணையத்தின் தலைமையகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரைக் கைது செய்தனர்.