சென்னை, ஆகஸ்டு 1- தனது கணீர்க் குரலாலும், கருத்துமிக்க நாட்டுப்புறப் பாடல்களாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் பரவை முனியம்மா.தூள் படத்தில் ‘சிங்கம் போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி’பாடலின் மூலம் திரைப்படப் பாடகியாகவும் நடிகையாகவும் அறிமுகமாகி, சில படங்களிலும் நடித்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தெரியும்படி மேலும் பிரபலமானார்.
சமீபகாலமாக அவருக்குச் சினிமா வாய்ப்புகளும் இல்லை.முதுமை காரணமாகப் பல ஊர்களுக்குச் சென்று பாடவும் முடியவில்லை.அதனால் வறுமையில் வாடத் தொடங்கினார்.மேலும்,உடலும் நலமில்லாமல் போனது.
உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நடிகர் தனுஷ், விஷால் இருவரும் மருத்துவச் செலவிற்குப் பணம் கொடுத்து உதவினார்கள்.
இந்நிலையில் அவர், தனது குடும்பத்தின் ஏழ்மைச் சூழலை விவரித்துத் தனது குடும்பத்திற்கு வள்ளலாகிய முதல்வர் ஜெயலலிதா தான் மறு வாழ்வு தர வேண்டும் எனப் பேட்டியில் சொல்லியிருந்தார்.
இதுபற்றிக் கேள்விப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதலமைச்சர் ஜெயலலிதா, பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்பச் செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவின் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான செலவுகளைப்‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.