சிங்கப்பூர், ஆகஸ்ட் 3 – “சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்றக் கொள்கைகளை வகுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல” என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்திற்கான பேட்டி ஒன்றில் சிங்கப்பூர் மக்கள் தொகை பற்றியும், வெளிநாட்டு ஊழியர்களின் குடியேற்ற உரிமைகள் பற்றியும் அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங்குடன் விவாதிக்கப்பட்டது.
அப்போது அவர், “சிங்கப்பூரில், வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்றக் கொள்கைகளை வகுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அவர்களால் தான் பொருளாதாரம் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதே சமயத்தில், அவர்களின் அதிகப்படியான குடியேற்றம், நம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. நாட்டின் கட்டமைப்புகள், பரப்பளவு, தாங்கும் தன்மை ஆகியவற்றையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.”
“அவர்கள் இல்லை என்றால், பொருளாதார பாதிப்புகள் ஏற்படும். ஆகவே, இந்த விஷயத்தில் ஒரு சமநிலையான முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் உள்ளேன். நான், என் குடிமக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த விவகாரத்தில் எது சிறந்ததோ அதனை செய்து வருகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில், சமீபகாலமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான குடியேற்ற கொள்கைகளில் அதிக கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு வருவது குறிப்படத்தக்கது.