புதுடெல்லி, ஆகஸ்டு 3- இந்திய நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. ஆனால், நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற முடக்கத்தைத் தவிர்க்க சபாநாயகர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டமும் தோல்வியில் முடிந்தது.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்த்தால் ஒழிய, நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இந்நிலையில், சாலையில் நடக்கும் போராட்டம் போல் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திப் நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிடத் தொடங்கினர்.
சபாநாயகரின் எச்சரிக்கையையும் மீறி, அவர்கள் தொடர் முழக்கங்களில் ஈடுபட்டதால், பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் 25 பேரை 5 நாட்கள் இடை நீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார்.
மேலும்,இதே போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரித்தார்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து 5 நாட்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கப் போவதாகத் திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும்,ஆம் ஆத்மி கட்சியினரும் தெரிவித்துள்ளனர்.