கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – அம்னோ ஆதரவாளர்களிடமிருந்து அரசியல் நன்கொடையாக 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெற்றிருப்பது குற்றமில்லை என்கிறார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின்.
“மலேசியாவில், ஆதரவாளர்களிடமிருந்து அப்படிப்பட்ட அரசியல் நன்கொடைகளை தடுக்கும் படியான எந்த ஒரு சட்டமும் இல்லை” என்றும் கைரி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி சட்டத்திற்குப் புறம்பான வகையில் வந்ததாகக் கூற முடியாது என்றும் கைரி தெரிவித்துள்ளார்.
மேலும், “அம்னோ, தேசிய முன்னணி மட்டுமல்ல, ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியல் பணிகளுக்காக தங்களது ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவது வழக்கமான ஒன்று தான். எல்லா கட்சிகளும் தங்களது நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுகிறார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்” என்றும் கைரி தெரிவித்துள்ளார்.
அது போன்ற நன்கொடைகள் கட்சியின் வங்கிக் கணக்குகளிலோ அல்லது கட்சி அறங்காவலர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலோ செலுத்தப்படும் என்றும், கட்சியின் கருவூலத்திற்காக அவர் (நஜிப்) அந்த நிதியை தனது வங்கிக் கணக்கில் வாங்கியதில் எந்த ஒரு தவறும் இல்லை என்றும் கைரி குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகையானது நன்கொடையாக வந்தது என்றும், அத்தொகை 1எம்டிபியில் இருந்து வந்த தொகையல்ல என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று அறிவித்தது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டப்பிரிவு 2009 -ன் படி, நன்கொடை என்பது ஒருவகையில் மன நிறைவு ஆகும்.