சென்னை, ஆகஸ்டு 4- தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஊர்களில் மதுவிற்கு எதிரான போராட்டம் வலுத்துள்ளதாலும், மதுக்கடைகளை அடித்து நொறுக்குதல், மதுக்கடைகள் மீது பெட் ரோல் குண்டு வீசுதல் போன்ற தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாலும், டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் அரசுக்கும் பொது மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“தமிழகமெங்கும் போராட்டம் வலுத்து வருகின்ற சூழ்நிலையில்,மதுக்கடைகளை மூடச் சொல்லி தமிழக அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அரசியல் கட்சியினரும் மாணவர்களும் பொதுமக்களும் மதுக்கடைகளை அடித்து நொறுக்கியும், ஊழியர்களைக் கடைக்குள் வைத்துப் பூட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சிக்கும் பதற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர். அரசாங்கத்தின் மீதான கோபத்தை, அப்பாவிக் கடை ஊழியர்களிடம் காட்டுவதை ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்த தனது நிலைபாட்டை அரசு காலம் தாழ்த்தாமல் அறிவிப்பதுடன், மதுக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.