சிட்னி, ஆகஸ்ட் 5 – ரியூனியன் தீவு கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமான இறக்கையின் ஒரு பகுதியில் காணப்படும் கடல் சிப்பிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மாயமான எம்எச் 370 விமானம் குறித்த முக்கிய, பயனுள்ள தகவல்களைப் பெற முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக கடலில் நீண்டதூரம் செல்லும் கப்பல்களின் அடிப்பகுதியில் குறிப்பிட்ட வகை கடல் சிப்பிகள் பாசிபோல் படர்ந்து ஒட்டிக் கொள்ளும். இத்தகைய கடல் சிப்பிகள் ரீயூனியன் தீவு கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் சிதைந்த பாகத்தில் காணப்படுகின்றன.
“இந்தக் கடல் சிப்பிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் குறிப்பிட்ட அந்த விமான பாகம் எத்தனை நாட்களாக கடலில் கிடந்தது, எத்தகைய கடற்பகுதிகளை அது கடந்து ரியூனியன் தீவுப் பகுதிக்கு வந்தது என்பதைக் கணக்கிட இயலும். ஒருவேளை எம்எச்370 விமானம் மாயமாவதற்கு முன்பே இந்த விமான பாகம் கடலில் விழுந்திருந்தால் அதையும் தெரிந்து கொள்ள முடியும்,” என்கிறார் சிட்னி மாக்யூரே பல்கலைக்கழக பேராசிரியர் மெலானி பிஷப்.
மேலும் அந்த விமான பாகம் கடலில் அடித்து வரப்பட்டபோது அந்தந்த கடற்பகுதிகளின் தட்பவெப்பம் குறித்து சிப்பிகளை ஆய்வு செய்தால் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஒருவேளை இக்குறிப்பிட்ட பாகம் எம்எச்370 விமானத்தினுடையதாக இருக்கும் பட்சத்தில் அது எந்த இடத்தில் கடலில் விழுந்தது, அதன் சிதைந்த பாகங்கள் எந்தெந்த கடற்பகுதி வழியே அடித்துச் செல்லப்பட்டன என்பது குறித்து சற்று தெளிவாக யூகிக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது.
“இதுபோன்ற பல்வேறு விவரங்களை ஒன்று சேர்த்து பார்க்கும்போது மாயமான விமானத்திற்கு என்ன நேர்ந்தது, அது எங்குள்ளது என்ற புதிருக்கு விடை கிடைக்கலாம். எந்த விவரமும் கைவசம் இல்லாத நிலையில், கடல் பாசிகளை ஆய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் சிறிய தகவல்கள் கூட பயனுள்ளதாகவே இருக்கும்,” என்கிறார் இத்தகைய ஆய்வில் அனுபவமுள்ளவரான ஜேம்ஸ்குக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்க் ஹாமான்.
இதற்கிடையே ரியூனியன் தீவு கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டின் டுலுஸ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள விமான இறக்கைப் பாகம் இன்று நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.