கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – “கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானது என்றால், அதற்கான சான்றிதழ்களை பொதுவெளியில் பிரகடனப்படுத்துங்கள்” என்று ஏர் ஆசியா நிறுவனம், எம்ஏஎச்பி-ஐ நிர்பந்தித்துள்ளது.
ஏர் ஆசியா நிறுவனம், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேஎல்ஐஏ 2 பாதுகாப்பானது என்பது தொடர்பாக எம்ஏஎச்பி, அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்திடமும், ‘ஐகேஆர்ஏஎம்’ (IKRAM) அமைப்பிடமும் சான்றிதழ்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அப்படி சான்றிதழ்கள் பெற்று இருந்தால், அதனை பொதுவெளியில் பிரகடனப்படுத்த வேண்டும்.”
“கடந்த ஒரு வருடமாக, நாங்கள் தொடர்ந்து எம்ஏஎச்பியிடம் இதனைக் கேட்டு வருகிறோம். எனினும், அத்தகைய சான்றிதழ்களை பிரகடனப்படுத்த எம்ஏஎச்பி, ஏன் தொடர்ந்து தாமதித்து வருகிறது? என்பது புரியாத புதிராகவே உள்ளது. எளிமையான இந்த கோரிக்கைக்காவது எம்ஏஎச்பி செவி சாக்கும் என்று நம்புகிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் ஆசியா ஏற்கனவே, கேஎல்ஐஏ 2 பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சேதாரங்களுக்கும் எம்ஏஎச்பியிடம் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.