கோலாலம்பூர் – ஊழல் தடுப்பு ஆணையம் தனது கடமைகளை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்க வேண்டும் என டத்தின் படுக்கா மரீனா மகாதீர் அறிவுறுத்தி உள்ளார். ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற உத்தரவைச் செயல்படுத்தியதற்காக அந்த ஆணையம் தண்டிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“விசாரணை செய்பவர்களே திடீரென விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படும் அசாதாரண சூழ்நிலை இங்கு நிலவுகிறது. தங்கள் வேலையைச் செய்தமைக்காக சிலர் தண்டிக்கப்படுவதை நாம் எங்கும் பார்க்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் சமூக, பொது அமைப்புகள் முன்வந்து தங்களது ஆதரவை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டியது அவசியம். ஊழல் தடுப்பு ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு எனில், அது தனது கடமையை நிறைவேற்ற அனுமதிக்கப்பட வேண்டும்,” என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் மூத்த மகளான மரீனா மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற மரீனா, அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.