கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மீதான விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐஜிபி காலிட் அபுபாக்கர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை எம்ஏசிசி வரவேற்றுள்ளது.
இந்த விசாரணை தொடர்பில் பரவி வந்த யூகங்கள் மற்றும் பொது மக்களிடையே பரவி வரும் தவறான கருத்துக்கள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காலிட் அபுபாக்கர் கூறினார்.
“காவல்துறையினர் தங்களை மிரட்டுவதாக ஊழல் தடுப்பு ஆணையத்தில் உள்ள எனது நண்பர்கள் தவறாகக் கருதிவிடக் கூடாது. இதன் காரணமாகவும் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் தலைமை ஆணையர் அபு காசிமை நானே தொடர்பு கொண்டு விசாரணை குறித்து விவரித்தேன். சில தகவல்கள் கசிந்தது எப்படி என்பது குறித்து மட்டுமே விசாரணை நடந்ததே தவிர, ஊழல் தடுப்பு ஆணையமே விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தேன்.”
“அரசாங்கத்தின் இதர முகமைகளின் நடவடிக்கைகளில் காவல்துறை தலையிடுவதை நாங்கள் எப்போதுமே விரும்பியதில்லை. எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே செயல்பட்டோம்” என்று அபுபாக்கர் மேலும் தெரிவித்துள்ளார்.