கோலாலம்பூர் – நஜிப், மொகிதின் இடையில் நிகழ்ந்து வரும் அரசியல் போராட்டத்தால் அம்னோவில் அனைவரின் கவனிப்புக்கும் உள்ளாகியுள்ள மாநிலம் ஜோகூர்.
அம்னோவின் பிறப்பிட மாநிலமே ஜோகூர்தான். மற்ற மாநிலங்களில் அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தாலும், அம்னோவைப் பொறுத்தவரை ஜோகூர் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்து வருகின்றது.
ஆனால், துன் ஹூசேனுக்குப் பிறகு ஜோகூர் மாநிலத்திலிருந்து யாருமே இதுவரை பிரதமராக வந்ததில்லை. இந்நிலையில்தான் மொகிதின் துணைப் பிரதமராகவும், அம்னோவின் துணைத் தலைவராகவும் உயர்ந்தபோது, அடுத்த பிரதமரைப் பெறப் போகின்றோம் என்ற உற்சாகத்தில் இருந்தனர் ஜோகூர் அம்னோவினர்.
ஆனால், அந்த நம்பிக்கையிலும் உற்சாகத்திலும் தற்போது மண் விழுந்து விட்டது.
மொகிதினை துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் அவருக்குப் பதிலாக தற்காப்பு அமைச்சரும், அம்னோ உதவித் தலைவருமான ஹிஷாமுடின் துன் ஹூசேனை முன்னிறுத்துவது நஜிப்பின் வியூகமாகத் தெரிகின்றது.
ஆனால், முன்னாள் பிரதமர் துன் ஹூசேன் ஓனின் மகனான ஹிஷாமுடினை ஜோகூர் மாநில அம்னோவினர் நஜிப்பின் உறவினராகத்தான் பார்க்கின்றனரே தவிர, ஜோகூர் மாநிலம் தரக் கூடிய அடுத்த தலைவராக அவரை யாரும் பார்க்கவில்லை.
ஜோகூர் மக்களிடம் நஜிப் மன்னிப்பு
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, பாசீர் கூடாங் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, டான்ஸ்ரீ மொகிதின் யாசினை துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதற்காக ஜோகூர் மக்களிடம் மன்னிப்பு கோருவதாக பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.
ஜோகூர் மக்களின் மனதைப் புண்படுத்தும் நோக்கில், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“அது ஒரு கடினமான முடிவு. எனினும் குறிப்பிட்ட சில காரணங்களால் அம்முடிவை எடுக்க வேண்டியிருந்தது. அது அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதே தவிர, ஜோகூர் மக்களின் மனதை காயப்படுத்துவது நோக்கமல்ல,” என்று பாசிர் கூடாங் அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் பேசிய நஜிப் குறிப்பிட்டார்.
பாசீர் கூடாங் அம்னோ தொகுதியின் தலைவராக இருப்பவர் ஜோகூர் மந்திரி பெசார் காலிட் நோர்டின் (படம்) என்பதால், நஜிப்பின் நேற்றைய வருகையும், அவரது உரையும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
காரணம், காலிட் நோர்டின் அண்மையக் காலமாக மொகிதின் நீக்கத்திற்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.
ஜோகூர் மாநிலம் அம்னோவுக்கு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவுக்காக தனது உரையில் நன்றி தெரிவித்த நஜிப், மக்களின் இந்த ஆதரவும் அம்னோ மீதான நம்பிக்கையும் இனிமேலும் தொடரும் என தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
“அம்னோவின் கோட்டையாக விளங்கும் ஜோகூர் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம். எனினும் கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும்,” என்றார் நஜிப்.
இருப்பினும் நஜிப் உரையாற்றும்போது பாசீர் கூடாங் அம்னோவினர் அமைதியாக இருந்து அவரது உரைக்கு அவ்வளவாக வரவேற்பு கொடுக்கவில்லை என்றும், மாறாக, காலிட் நோர்டின் பேசும்போது கைதட்டியும் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தும் வரவேற்பு கொடுத்தனர் என்றும் இணையத் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதிலிருந்து மொகிதின் பதவிப் பறிப்பால், ஜோகூர் மாநில அம்னோவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்பது புலனாகியுள்ளது.