சான்பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 11 – “சுந்தர் பிச்சை, கூகுளின் தலைமை ஏற்க இதுவே சரியான தருணம். நாங்கள் இந்த முடிவில் மிகத் தீர்மானமாக இருக்கிறோம்” – இது கூகுள் நிறுவனர் லாரி பேஜ், சுந்தர் பிச்சை தலைமை நிர்வாகியாக பதவியேற்கிறார் என்பதற்காக வெளியிட்ட பதிவாகும். ஆம், மறுசீரமைப்பில் ஈடுபட்டு இருக்கும் கூகுள் நிறுவனம், இரண்டாக பிரிய இருக்கிறது. அண்டிரொய்டு, குரோம் இயங்குதளம், விளம்பரங்கள், கூகுள் ப்ளே ஸ்டார், மேப், யூ டியூப் ஆகிய பிரிவுகள் அடங்கிய கூகுளுக்குத் தான் சுந்தர் பிச்சை தலைமை ஏற்க இருக்கிறார்.
கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜும், செர்ஜி பிரின்னும் ‘ஆல்ஃபபெட்’ (Alphabet) என்ற புதிய நிறுவனத்தை தொடங்க இருக்கின்றனர். அந்த நிறுவனம், கூகுள் இதுவரை மேற்கொண்ட எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் சார்ந்த வர்த்தகங்களை கையாளும். மேலும், கூகுளையும் மேற்பார்வையிடும்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள் லாரி பேஜின் இந்த முடிவு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளன. அதேசமயம், சுந்தர் பிச்சையால் இதனை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர், சுமார் 11 வருடங்களுக்குள் கூகுளின் தலைமை நிர்வாகியாக பதவி ஏற்கும் அளவிற்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். இவரது அசாத்திய திறமை தான், ஆண்டி ரூபினிடமிருந்து அண்டிரொய்டின் தலைமைப் பொறுப்பை இவருக்கு தந்தது.
அண்டிரொய்டில் இவர் காட்டிய ஈடுபாட்டால், குரோம் இயங்குதளத்தை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பும் இவருக்கு தரப்பட்டது. எதற்கும் சளைக்காத சுந்தர், அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தினார். தற்போது, கூகுளின் தலைமை பொறுப்பே அவரைத் தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.