கொழும்பு, ஆகஸ்ட் 14- இலங்கையில் இன்றோடு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இத்தேர்தலில் இரண்டு மிக முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புத் தலைவராக அதிபர் சிறிசேனா இருக்கிறார்.இதே கூட்டமைப்புக் கட்சியைச் சேர்ந்த ராஜபக்சே பிரதமர் தேர்தலில் போடியிட விருப்பம் தெரிவித்த போது அதற்கு மறுப்புத் தெரிவித்தார் சிறிசேனா.ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் சிறிசேனாவை வற்புறுத்தி இதற்குச் சம்மதிக்க வைத்தனர்.இருந்தபோதிலும்,ராஜபக்சேவை முழுமனதாக ஏற்றுக் கொள்ளாமல் விமர்சனம் செய்து வந்தார்அதிபர் சிறிசேனா.
இந்நிலையில், ராஜபக்சேவுக்கு இத்தேர்தலில் மக்களிடையே போதிய ஆதரவு இல்லை எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
“ஒரு வேளை இத்தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற்றாலும் அவருக்குப் பிரதமர் பதவி தரப் போவதில்லை.கட்சியில் தகுதியுடைய மூத்த தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரைத் தான் நான் பிரதமராகத் தேர்வு செய்வேன்” என அதிபர் சிறிசேனா திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதற்குப் பதிலளித்து ராஜபக்சே இன்று சிறிசேனாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார் ராஜபக்சே. அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் என்னைப் பிரதமராகத் தேர்வு செய்ய வேண்டும்.மக்கள் ஆணையை ஏற்று எப்படி நான் பதவி விலகினேனோ, அப்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையான மக்களின் தேர்வுக்கு மதிப்பளிக்கவேண்டும். இனவாதம் தொடர்பான என்மீதான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்” என்று தன்னிலை விளக்கமும் வேண்டுகோளும் வைத்துக் கடிதம் எழுதியுள்ளார்.