சென்னை, ஆகஸ்ட் 20- தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நண்பர் சாதிக் பாட்ஷாவின் மனைவி ஆகிய 17 பேர் மீது சிபிஐ புதிதாகச் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மீது ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைதாகிச் சிறையில் தண்டனை அனுபவித்துப் பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர் மத்திய மந்திரியாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகத் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பெயரிலும் ரூ.27 கோடியே 92 லட்சத்துக்கு சொத்துச் சேர்த்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ. புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கில் ஆ. ராசா மட்டுமல்லாமல் அவருடைய மனைவி பரமேஸ்வரி, சகோதரர் கலியபெருமாள், அக்கா மகன் பரமேஷ்குமார், பரமேஷ்குமாரின் மனைவி கலா,தற்கொலை செய்து கொண்ட ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷாவின் மனைவி ரேஹா பானு உட்பட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வழக்கு தொடர்பாக டெல்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கோவை ஆகிய நகரங்களில் வீடுகள், அலுவலகங்கள் என 20 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள், வைப்புத்தொகைப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.